×

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி?.. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடும் எடப்பாடி தரப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சியான தமாகாவுக்கு விட்டுக் கொடுப்பதா என்பது குறித்த பேச்சு வார்த்தை நீடித்து வருகிறது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய த.மா.கா. தலைவர் வாசன்; கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசித்து வேட்பாளரை அறிவிப்போம். கடந்த முறை நாங்கள் போட்டியிட்டாலும் இந்த இடைத்தேர்தலில் கூட்டணி வெற்றியே முக்கியம் என கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் த.மா.கா. போட்டியிட்ட தொகுதி என்பதால் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுகவே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்ட த.மா.கா.வினர் தங்களுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் அதிமுகவே வேட்பாளரை நிறுத்தும் எனவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் பெற ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து தேவை.

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து கையெழுத்திட்டால் அதிமுகவில் மீண்டும் இரட்டைத் தலைமை என்பது உறுதியாகிவிடும். மீண்டும் இரட்டைத் தலைமை சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டாலும் அவர்களுக்கு இரட்டை இலை வழங்க பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பார் என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இடம்பெறுமா என்பது தெரியவரும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது.

எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பின் தாக்கல் செய்யப்பட்ட கட்சியின் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது. கட்சியின் வரவு-செலவு கணக்கை ஏற்றதை சுட்டிக்காட்டி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags : Erode East Constituency ,Edappadi Party ,Election Commission , AIADMK contest in Erode East Constituency?..Edappadi side seeks Election Commission regarding double leaf symbol..!
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...