×

எஸ்எஸ்சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி..!!

டெல்லி: எஸ்.எஸ்.சி. எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழ் மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தக்கூடிய தேர்வாக நடைபெறும். 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி, அசாமி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கனி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, மணிப்புரி, ஒடிசா, பஞ்சாபி, உருது போன்ற மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கும் பட்சத்தில், அந்த மொழி கொண்ட மாணவர்கள் அதிகளவில் தேர்வில் பங்கேற்று ஒன்றிய அரசு பணிகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.சி. தேர்வு:

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு மாநில மொழிகளிலும் தேர்வு நடத்துவதே நியாயமானதாகும். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் பணியாற்றுவதும் சிரமம். எஸ்.எஸ்.சி.யின் இத்தகைய நடவடிக்கை சமவாய்ப்பு கோட்பாட்டுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது கடினம். அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக உள்ளது என்ற பிரச்சினை ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ளது.

எனவே இந்த தேர்வை மாநில மொழியில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எஸ்.எஸ்.சி. எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் மொழியில் எழுத ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Union Public Service Commission , SSC Multi Tasking Exam, Tamil Language, Selection Board
× RELATED 2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ்...