நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நேர்காணலை தொடங்கி வைத்து டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை: திமுக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் மாநில செயலாளராக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டச் செயலாளர்களோடு கலந்து பேசி விரைவில் விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அவர் வெளியிடவுள்ளார். திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஈஸ்வரப்பன் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வகையில், அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பட்டியலை கேட்டு வாங்கி அதிலிருந்து நிர்வாகிகள் நியமனத்தை நடத்த தயாநிதி மாறன் திட்டமிட்டுள்ளார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்பதில் தயாநிதிமாறன் உறுதியாக உள்ளார். எனவே இந்த பதவிகளுக்கான நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் இன்றும், நாளையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நேர்காணலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை  செயலாளர் கே.என்.நேரு, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு பேசியதாவது: எந்த துறை வழங்கினாலும் சிறப்பாக செயல்படுபவர் தயாநிதி மாறன். ஒன்றிய அமைச்சராக தயாநிதி மாறனுக்கு கலைஞர் பதவி வழங்கிய போது சிறப்பாக செயல்பட்டு பல சாதனை படைத்தார். தோஹா  மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய உரையை, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பாராட்டினார்.

எதிர்கருத்து கொண்ட கட்சியாக இருந்தாலும் வாஜ்பாய்  சிறந்த தலைவர் என பாராட்டுவதில் தவறில்லை. தயாநிதி மாறன் விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக நியமிக்கட்டுள்ளதால் சிறப்பாக செயல்படுவார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.  இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கே திமுக நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, திமுக முதன்மை செயலாளரும். அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், ‘‘திமுக  விளையாட்டு மேம்பாட்டு அணியில் சிறப்பானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுபவர்களுக்கு பதவி  வழங்க வேண்டும்.

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத்துறை பெரிய துறையாக மாற்றம் பெற்றுள்ளது.  திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் பதவி பெறுபவர்கள் திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்’’ என்றார். இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவாரூர், திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, தஞ்சை வடக்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் வடக்கு, வேலூர் மேற்கு (திருப்பத்தூர்), வேலூர் மத்திய, வேலூர் கிழக்கு(ராணிப்பேட்டை) மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

Related Stories: