பாஜகவின் குரலாக ஆளுநர் செயல்படுகிறார்: கே.எஸ்.அழகிரி பேச்சு

தண்டையார்பேட்டை: பாஜகவின் குரலாக ஆளுநர் செயல்படுகிறார் என்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக  செயல்படும் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர்  கே.எஸ்.அழகிரி  தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

காங்கிரஸ் துணை தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், முத்தழகன், டில்லிபாபு, பெரம்பூர் நிஜார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று  காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்  நான் கலந்துகொண்டேன். ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதை கெடுக்கும் விதமாக ஆளுநரை அனுப்பி வைத்துள்ளனர். மதங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இல்லை. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா வாதியாக செயல்படுகிறது. நாடு என்பது வேறு, தேசம் என்பது வேறு. 534 சமஸ்தானங்களை ஒன்று சேர்த்தது காங்கிரஸ் கட்சி. ஒரு கட்சியின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார். இந்து மதத்தை பாஜகவால் காப்பாற்ற முடியாது.

அவர்களால் மதத்தை உடைக்கத்தான் முடியும். ஆனால் காங்கிரஸ் அனைத்தையும் ஒன்றிணைக்கும். தமிழக முதல்வர்  தமிழ்நாட்டில் எந்த பிரச்னை என்றாலும்  நேரடியாக சென்று சரிசெய்து வருகிறார். இதை தாங்கிக்கொள்ள முடியாமல், இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ள எண்ணம் இல்லாமல்  பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

Related Stories: