×

பழநி முருகன் மலைக் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்: கோபுரங்களில் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது

பழநி: பழநி முருகன் மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின. இதையடுத்து கோபுரங்களில் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் கோயிலில் முகூர்த்தக்கால்  நடப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியது. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கியது.

தொடர்ந்து கோயிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது.  முன்னதாக ராஜகோபுர 5 கலசங்கள், உப சன்னதி 45 கலசங்கள் என 50 கலசங்களும் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. முதலில் ஆனந்த விநாயகர் சன்னதி, தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பிற சன்னதிகளில் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோயில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி மாலை 5 மணிக்கு தீபத்திருமகள் வழிபாடு, கோயில் ஓதுவார்களின் பண்ணிசை, இறைவனிடம் அனுமதி பெறுதல், பேரொளி வழிபாடு, புனிதநீர் குடம் வழிபாடு, புனிதநீர் தெளித்தல், விநாயக பெருமான், சிவபெருமானிடம் அனுமதி பெறுதல், முருகப்பெருமானிடம் தண்டம் சமர்ப்பித்து வழிபாடு, திருவொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : Kumbabhishek ,Palani Murugan Hill Temple , Palani Murugan Hill Temple, Kumbabhishek Pujas, Installation of Kalashas in Gopurams
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா