×

ஆவடி ரயில்நிலையத்தில் உடல் தகுதி தேர்வுக்கு காத்திருக்கும் அவலநிலை

ஆவடி: ரயில்வே வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு குரூப்-டி பிரிவில் கேங்மேன், ஹெல்பர், எலக்ட்ரிகல், பிட்டர், பெயின்டர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன் நடுவே கடந்த 2 ஆண்டு கால கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கில் ரயில்வே எழுத்து தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பம் அளித்தவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், இப்பணிகளுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல் 5 நாட்கள் ஆவடி சிறப்பு காவல்படைமைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்க தமிழகம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவடி ரயில் நிலைய 4வது நடைமேடையில் கொட்டும் பனியில் தங்கியுள்ளனர்.

இதுகுறித்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் கூறும்போது, நாங்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து உடல் தகுதி தேர்வுக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு இங்கு போதிய அறைவசதி இல்லை. தேர்வு நடைபெறும் மைதானத்திலும் தங்கவிடவில்லை. இதனால் நாங்கள் ஆவடி ரயில்நிலையத்திலேயே தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இங்கு எங்களின் உடைமைகளை நாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்தது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

Tags : Aavadi railway station , Plight of waiting for physical fitness test at Aavadi railway station
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் மேம்பாலத்தை...