×

விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழில் மையம் அழைப்பு வருகிறது ‘மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்’

பல்லடம்: பல்லடம், பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் அரசின் மானியத்துடன் கூடிய மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்க விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு மாவட்ட தொழில் மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், தொழில்துறை மேலும் மேம்பாடு அடையும் எனவும் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரும்பாளியில் ஒன்றிய அரசு, மாநில அரசு மானிய நிதியுதவி மற்றும் பூங்கா உறுப்பினர்கள் பங்களிப்புடன் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த பூங்கா செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் விசைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்லடம், பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு அரசின் மானியத்துடன் கூடிய மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், தொழில்துறை மேலும் மேம்பாடு அடையும் எனவும் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றும், பின் தங்கிய கிராமங்களை வளர்ச்சி பெற செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

 திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார ஒன்றிய பகுதிகள் தொழில் துறையில் பின் தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் சிறு, குறு ஜவுளி பூங்காக்கள் (மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்) தொடங்க அரசு 50 சதவீதம் மானியமும், அதிகபட்சமாக ரூ.2 கோடியே 50 லட்சமும் மானியமாக அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 ஏக்கர் நிலம் வேண்டும். மூன்று நிறுவனங்கள் சேர்ந்து தொழிலகம் ஏற்படுத்தலாம்.

மேலும் பின்தங்கிய பகுதியில் தொழில் தொடங்கினால் இயந்திரம் கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியமும் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சமும் மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் குறைந்த செலவில் தரமான துணிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு அண்டை நாடுகளுடன் தொழில் ரீதியாக போட்டியிட்டு துணி ரகங்களை சந்தைப்படுத்த முடியும். இதன் மூலம் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில்துறை மேம்பாடு அடையும்’’ என்றார்.

இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளரும், மத்திய அரசின் விசைத்தறி ஜவுளி மேம்பாட்டு தேசிய கவுன்சில் துணைத்தலைவருமான கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசின் மானியத்துடன் கூடிய மினி ஜவுளி பூங்கா திட்டம் வரவேற்கக்கூடியதாகும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் விசைத்தறி தொழில் மட்டுமின்றி அதன் சார்பு தொழில்களும் அதிக வளர்ச்சி அடையும். கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடையும். பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

குறைந்த செலவில் தரமான துணிகளை உற்பத்தி செய்து உள்ளூரில் துணி விற்பனை செய்யலாம். மேலும் துணிகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை பெற்று அண்டை நாடுகளுடன் தொழில் ரீதியாக போட்டியிடலாம். அந்த அளவுக்கு துணி விற்பனை செய்யும் நிலை விசைத்தறியாளர்களுக்கு ஏற்படும். எனவே இது அவர்களை தொழிலில் உயர வைக்கும் மகத்தான திட்டமாகும். ஜவுளி துறை வரலாற்றில் புதியதோர் மைல்கல்லாக இத்திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தால் சிறு, குறு தொழில் துறையினர் பயன் அடைவர். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது பல்லடம் பகுதிக்கு இந்த திட்டம் முதன் முதலாக கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

விசைத்தறி உரிமையாளர்களுக்கு பயன்
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் ஆர்.கோபால்:
தமிழக அரசு மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்கும் திட்டத்தில் பல்லடம், பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இப்பகுதிகளில் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்க 2 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு சாலை வசதி,  மின் இணைப்பு வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை அரசு செய்து கொடுக்கும். மேலும் ரூ.2.5 கோடி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்தியாளர் ஒன்றிணைந்து மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்க முடியும். இதன் மூலம் விசைத்தறி உரிமையாளர்கள் பலர் பயன்பெறுவர். விசைத்தறியாளர்கள் இதுபோன்ற அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தொழிலை புதுப்பித்துகொள்ள வாய்ப்பு
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் பாலாஜி: தமிழக அரசு பின்தங்கிய பகுதிகளை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலும், விசைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையிலும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்கும் திட்டத்தின் மூலம் ரூபாய் 2.50 கோடி அளவிற்கு மானியம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். நிதி நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்களில் தவித்து வரும் விசைத்தறியாளர்கள் இதன் மூலம் தங்களது தொழிலை புதுப்பித்து கொள்ள முடியும்.


Tags : Mini Textiles Park , Powerloom Textile Manufacturer, Industry Center Call,'Mini Textiles Park'
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...