×

நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடியில் 3 நாள் பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 3 நாள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பறவைகளையும் அதன் இயற்கை அழகு, அழைப்பொலி,  வண்ணங்கள், பறக்கும் அழகு போன்றவைகளை ரசிக்காத, பார்த்து பரவசமடையாத மனிதர்கள் கிடையாது.

வானில் ஒட்டு மொத்தமாக சிறகடித்து ராணுவ அணிவகுப்பு போல் சிறிதும் மாறாமல் நேர்கோட்டில் பறவைகள் அதிகாலையிலும், மாலையில் பறப்பதை காண்பது புத்துணர்ச்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தும். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் நதிக்கரையிலும் அதன் துணை ஆறுகள், பாசன குளங்களிலும் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருடத்தின் 365 நாளும் முகாமிட்டு தம் இனத்தை பெருக்குகின்றன.
 
குறிப்பாக, நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், நெல்லை நயினார்குளம், கங்கைகொண்டான், சூரங்குடி குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருப்பணிச்செட்டிகுளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய குளங்களிலும் தென்காசி மாவட்டம் வாகைகுளம், ராஜகோபாலபேரி ஆகிய குளங்களிலும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக முகாமிடுகின்றன.

இந்தப்பறவைகளின் வருகை, அதன் இனப்பெருக்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆண்டுதோறும் கணக்ெகடுப்பு நடத்தப்படுகிறது. 13வது ஆண்டு தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 27, 28, 29ம்  தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய  நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.  

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வன காப்பு மையம், மணிமுத்தாறு நெல்லை நீர்வளம் அமைப்பு, நெல்லை மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து மேற்கொள்ள உள்ளன. கணக்கெடுப்பின் போது அப்பகுதி பொதுமக்களிடம் குளங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பும் பறவை ஆர்வலர்கள் தங்கள் பெயர்களை twbc2020@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக வருகிற 25ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
கணக்கெடுப்பில் பங்கேற்பவர்களுக்கு 27ம் தேதி மதியம் 3 மணிக்கு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து 28, 29ம் தேதிகளில் 3 மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பறவைகள் எண்ணிக்கை
கடந்த 2011ம் ஆண்டு 42 குளங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 32 ஆயிரத்து 375 பறவைகள் இருந்தது தெரியவந்தது. 2012ம் ஆண்டு 55 குளங்களில் 29 ஆயிரத்து 576 பறவைகள் கண்டறியப்பட்டன. கடந்த 2021ம் ஆண்டு 62 குளங்களில் ஆய்வு நடத்தப்பட்டு 26 ஆயிரத்து 868 பறவைகள் கணக்கிடப்பட்டன. கடந்த ஆண்டு 65 குளங்களில் 28 ஆயிரத்து 831 பறவைகள் கண்டறியப்பட்டன.

Tags : Paddy ,Chetankasi ,Thuthukudi , Nellai, Tenkasi, Thoothukudi, 3-day bird survey, volunteers can participate
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...