×

வாடி வதங்கும் வாயில்லா ஜீவன்களுக்கு அரசின் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ புதுவாழ்வு தரும்: விலங்குகள் நல அமைப்புகள் நம்பிக்கை

சேலம்: வாடி வதங்கும் வாயில்லா ஜீவன்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ புதுவாழ்வு தரும் என்று விலங்குகள் நல அமைப்புகளின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று உருகியவர் தனிப்பெரும் கருணை கொண்ட அருட்பிரகாச வள்ளலார். அவரது 200வது ஆண்டு பிறந்தநாளையொட்டி, ரூ.20கோடியில் தமிழ்நாட்டில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை காப்பதற்காக இந்த காப்பகங்கள் உருவாக்கப்படுகிறது. இது போன்ற  விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு வரும் நிதியாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் ஆதரவு இல்லாத, கைவிடப்பட்ட, காயம்பட்ட நிலையில் தெருவில் சுற்றித்திரியும் பல்வேறு விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதும் உறுதி செய்யப்படும்.

பிராணிகள் துயர்துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்குவதற்கும் நிதியுதவி கிடைக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் இந்த திட்டம், விலங்குகள் நல அமைப்புகள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து விலங்குகள் நல அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
1970ம் ஆண்டிலிருந்து தற்போது வரை நடந்துள்ள கணக்கீடுகளின்படி பாலூட்டிகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் ஊர்வன, பறப்பன போன்ற உயிரினங்கள் 68சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வனஉயிரினங்கள் மட்டுமன்றி, கடலில் வாழும் அரிய உயிரினங்களும் அழிவை சந்தித்துள்ளது. இது ஒரு புறமிருக்க நகர்ப்புறங்களிலும், ஊரகங்களிலும் பல்ேவறு அரிய உயிரினங்கள் திடீரென ேதான்றி, மனிதர்களின் தாக்குதலுக்கு ஆளாகிறது. அதிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அரிய வகை உயிரினங்களை கண்டு மிரளும் மக்கள், அவை தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ற பயத்தில் அவற்றை தாக்குவதை தான் முதல் நோக்கமாக கொண்டுள்ளனர்.

இதேபோல் பல வீடுகளில் நாய்கள், பூனைகள் வளர்ப்பதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது நோய் பாதிப்புகள் ஏற்பட்டாலோ, சர்வசாதாரணமாக ஏதாவது ஒரு இடத்தில் கொண்டு வந்து, ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்கின்றனர். இதில் அனைவரும் விரும்பும் செல்லப்பிராணிகளான நாய்களின் நிலை தான், படுமோசமாக உள்ளது. கவுரவத்திற்காக பணத்தை கொட்டி உயர்ரக நாய்களை வாங்குகிறவர்கள், அவற்றை முழுமையாக பராமரித்து வளர்க்கின்றனர்.

ஆனால், தெருக்களில் கிடக்கும் கேட்பாரற்ற குட்டிகளை தூக்கி சென்று வளர்ப்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவற்றை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவை அனைத்திற்கும் மேலாக இங்கும் பாலின பாகுபாடு தலைதூக்கி நிற்கிறது. கேட்பாரற்ற குட்டிகளில் கூட 95சதவீதம் பேர், ஆண்நாய்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். பாலின வேறுபாட்டால் ஆயிரக்கணக்கான நாய் குட்டிகள், மாநிலம் முழுவதும் சுற்றித்திரிகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே வாகனங்கள் மோதி, பல உயிரினங்கள் சிதைந்து கிடப்பதையும் நாம் கண்கூடாக பார்த்து விட்டு கடந்து செல்கிறோம். இது போன்ற அனைத்து அவலங்களுக்கும், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் உரிய தீர்வு தரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

உதவும் கரங்கள் மேலும் உயரும்
‘‘மனிதாபிமான அடிப்படையில் பலர், நமது வாழ்வோடு கலந்துவிட்ட உயிரினங்களுக்கு ஆபத்தான நிலையில் மீட்டு உதவி வருகின்றனர். மேலும் பலருக்கு உதவ வேண்டும் என்ற மனமிருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் விலகி நிற்கின்றனர். உதாரணமாக சக மனிதர் ஒருவர், அபாயத்தில் இருக்கும் போது 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பிராணிகளுக்கு உதவ, யாரை முதலில் நாடுவது என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழ்நாடு அரசின் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் இந்த நிலையை மாற்றும். இதனால் பிராணிகளுக்கு உதவும் கரங்கள் மேலும் உயரும்,’’ என்பதும் விலங்கியல் ஆர்வலர்களின் நம்பிக்கை.

Tags : Biodiversity Reserves' ,Welfare Organisations , Wadi Vadahangum Vaillai Jeevan, Govt.'Vallalar Biodiversity Reserves', Animal Welfare Organization
× RELATED வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்...