×

அதிமுக எடப்பாடி, அதிமுக ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிப்பு; தனித்தனியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டம்: ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் நடத்திய பேச்சு தோல்வி

சென்னை: கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சியான தமாகாவுக்கு விட்டுக் கொடுப்பதா என்பது குறித்த பேச்சு வார்த்தை நீடித்து வருகிறது.

தேர்தல் செலவுக்கான முழு ெபாறுப்பை யார் ஏற்பது என்ற அடிப்படையில் இரு கட்சிகள் சார்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் யுவராஜா போட்டியிட்டார். எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமாகா போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன், கடந்த இரு நாட்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான், இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த  அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின் ஆகியோர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, கூட்டணி தர்மத்தை மதித்து தமாகா போட்டியிட அதிமுக உதவ வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தமாகாவால் செலவு செய்ய முடியாது. படுதோல்வியை சந்தித்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானமாக போய்விடும்.

இதனால் அதிமுக போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி தரப்பினர் வலியுறுத்தினர். அதேநேரத்தில் தமாகா போட்டியிட்டால் பாஜக போட்டியிடாது. அதிமுக போட்டியிட்டால் பாஜக போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும். அமித்ஷா, மோடி ஆகியோரிடம் நான் பேசுகிறேன் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார். இதனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அதேநேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வர உள்ளது. தீர்ப்பு வெளிவந்து யாருக்கு அதிமுக என்பது முடிவுக்கு வந்தாலும், இரட்டை இலை சின்னம் என்பது அடுத்த கட்ட கேள்விகுறியாக இருக்கும். சின்னத்தை யாருக்கு வழங்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய  முடியும். இதனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் கூட்டணி தர்மத்தை மதித்து ஜி.கே.வாசனுக்கு விட்டு கொடுப்பார்களா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க தனி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற குழப்பம் அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. அதேநேரத்தில் பாஜகவும் தனித்துப் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

மேலும் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இது குறித்து வருகிற 23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் டிடிவி தினகரனும் போட்டியிடுவதா அல்லது பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுக்கலாம் என்று காத்திருக்கிறார். இதனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு முடிவு எடுக்க முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதுகுறித்து இருதரப்பு மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தமாகாவுக்கு விட்டு கொடுக்க ேவண்டும் என்று வாசன் கூறுகிறார். பாஜகவுக்கு விட்டு கொடுக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு கிடையாது. இதனால் பாஜவுக்கு எடப்பாடி பழனிச்சாமி விட்டு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தமாகாவுக்கு விட்டு கொடுக்கும் பட்சத்தில், தேர்தல் செலவுகளை ஜி.கே.வாசன் முழுமையாக ஏற்பாரா என்பதும் கேள்வி குறிதான்.

எனவே தான், தேர்தல் செலவை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டு தமாகா வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவதை விட, எடப்பாடி பழனிச்சாமி, தனது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி செலவு செய்வதை விரும்புகிறார். அப்படி அவர் செய்தால் ஓபிஎஸ்சும் தனது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த கூடும். இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு விண்ணப்பித்தால் சின்னத்தை முடக்கும் நிலை தான் உருவாகும். இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதனால் ஓரிரு நாளில் அனைவரும் பிடிவாதம் பிடித்து செயல்பட்டால், எதிர்க்கட்சிகள் சார்பிலேயே 10 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Tags : Edapadi ,O. Panneerselvam ,Bajaka ,G. ,Vassan , Confusion continues in AIADMK Edappadi, AIADMK O. Panneerselvam, BJP alliance; Opposition plans to contest separately: AIADMK executives' talks with GK Vasan fail
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்