×

8 கி.மீ., நீளத்தில் அமைகிறது; தொப்பூர் கணவாயில் ரூ.370 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்: அரசுக்கு கருத்துரு அனுப்பியதாக ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

தர்மபுரி: தொப்பூர் கணவாயில் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்தாண்டு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு 8 கி.மீ., நீளத்திற்கு ரூ.370 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக, கலெக்டர் தொிவித்துள்ளார். தர்மபுாி - சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் உள்ளது. மலைக்குன்றுகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாயின் வழியாக தர்மபுாி, சேலம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

தினசரி லட்சக்கணக்கிலான வாகனங்கள் இந்த கணவாய் வழியாக கடந்து செல்கிறது. அதிவேகம், அலட்சியத்தால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டது. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் ரயில்வே இரட்டை பாலம் வரை, 8 கி.மீ., தூர சாலை இறக்கமும், வளைந்தும் செல்கிறது. இதில் குறிப்பாக தொப்பூர் கணவாயில் 4 கி.மீ., தூரம் மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்ட சாலையாக உள்ளது. தொப்பூர் கணவாயில் சாலை விபத்து ஏற்பட்டால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெரிய விபத்து என்றால் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

இப்பகுதியில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை மற்றும் எல்அன்டி நிர்வாகமும் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விழிப்புணர்வு பலகை, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர், வேகத்தடை, ஒலிபெருக்கியில் எச்சாிக்கை செய்யப்படுகிறது. வாகனத்தின் வேகத்தை குறைக்க, சாலையில் போிகாடு அமைத்து, வேகத்தை குறைத்து செல்லும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நவீன கேமராவுடன் கருவிகள் அமைக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் கடந்த காலத்தை ஒப்பிடும் போது, தற்போது விபத்துகள், உயிாிழப்பு குறைந்துள்ளது. தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் 2வது வளைவு பகுதியில், சுமார் 40 மீட்டர் அளவிற்கு கூடுதலாக மெட்டல் பாதுகாப்பு தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு வேலியை, கலெக்டர் சாந்தி, நேற்று நோில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:
வாகனங்கள் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக தொப்பூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால்,  விபத்துகள் சற்று குறைந்துள்ளது. இன்னும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் தொப்பூர் கணவாயில் 57 விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இதுவே, 2022ல் நடந்த 50 விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொப்பூா் கணவாயில் சாலை வளைந்து, நெளிந்து செல்கிறது.

வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நடக்கிறது. இதை தவிர்க்க தொப்பூர் கட்டமேட்டில் இருந்து, தொப்பூா் ரயில்வே இரட்டை மேம்பாலம் வரை ரூ.370 கோடி மதிப்பிட்டில் 8 கி.மீ., தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் கருத்துரு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பணிகள் முழுவீச்சில் தொடங்கும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஏடிஎஸ்பி இளங்கோவன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரனிதரன், கதிர்வேல் மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொப்பூர் கணவாயில்கடந்த ஆண்டு 23 பேர் பலி
தொப்பூர் கணவாயில், கடந்த  2019ம் ஆண்டு நடந்த 57 விபத்துக்கள் மூலம் 23 பேர் பலியாகினர். 55 பேர் காயமடைந்தனர். 2020ம் ஆண்டு நடந்த 47 விபத்துக்களில் 17 பேர் உயிரிழந்தனர். 57 போ் காயமடைந்தனர். 2021ம் ஆண்டில் நடந்த 39 விபத்தில் 18 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். அதேசமயம் 2022ம் ஆண்டில் 50 விபத்துக்கள் நடந்ததில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.


Tags : Topur , Toppur pass, Rs.370 crore high-level flyover, concept to Govt.
× RELATED தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!!