×

பெரியகுளம் மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அடிப்படை வசதிகளுடன் சீரமைக்கப்படுமா?.. முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

பெரியகுளம்: கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். தமிழக முழுவதும் அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து செயல்படும். மேலும் பயனுள்ளதாக மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும், அரசியல் விமர்சகரும் முதல்வரை பாராட்டினர்.

பெரியகுளம் மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் 12 பேர் வேலை செய்து வருகின்றனர். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கப்படும் இந்த உணவகத்தில் காலையில் தோசை, இட்லி சட்னி, சாம்பார் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். தோசை ரூபாய் ஐந்துக்கும் இட்லி ரூபாய் ஒன்றுக்கும் விற்பதாகவும் மதிய சாப்பாடு ரூபாய் ஐந்துக்கு விற்பதாகவும் இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும் அதிகாலை 5 மணிக்கு துவங்கும் இந்த உணவகத்தில் காலை முதல் தினசரி மார்க்கெட்டிற்கு ஏராளமான வியாபாரிகள் வந்து செல்வதாலும் பொதுமக்கள் ஏராளமான வந்து செல்வதாலும் அவர்கள் அனைவரும் இந்த உணவகத்தில் உணவருந்தி செல்வதற்கு வசதியாக இருப்பதாகவும் இங்கு பணியில் உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். மதிய சாப்பாடு அதிக அளவில் விற்பனை ஆவதில்லை என்றும் இந்த அம்மா உணவகம் தொடர்ந்து இரவு 8 மணி வரை செயல்படுவதாகவும் அங்கு பணி செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர். பெரியகுளம் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை கடந்த ஆட்சியின் போது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கவனிக்க தவறி விட்டனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இன்று தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், வருவாய்த்துறை அலுவலகங்கள், மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வரும் பொதுமக்கள் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த உணவகத்தில் போதுமான இருக்கைகள் இல்லை.

உணவகத்துக்கு பின்புறம் திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அன்றாடம் காய்கறி சந்தை, அரசு பள்ளி, அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், வயதானவர்கள், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து வயதானவர்கள் அமரும் வகையில் இருக்கைகள், டேபிள்கள் மற்றும் தூய்மையான குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உணவகத்தின் முன்பு வாகனங்களை நிறுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘உணவகத்தின் பின்புறம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் காய்கறிச் சந்தையில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உணவகத்திற்கு தேவையான விளக்குகள், மின்விசிறிகள், பாத்திரங்கள், இருக்கைகள் உள்ளிட்டவைகளை புதிதாக வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மாதந்தோறும் அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தி பொதுமக்களின் குறைகளை களைய வேண்டும்.

அன்றாடம் ஏழை எளியவர் வந்து செல்லும் அரசு மருத்துவமனை, மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு,அம்மா உணவகத்தை மேலும் நவீனப்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.’’ என்றனர்.

Tags : Periyakulam , Periyakulam Market, Amma Restaurant, Elderly, Poor, Simple People,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி