×

ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாம்: விவசாயிகள் அச்சம்

ஓசூர்: ஓசூர் அருகே, குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ள காட்டு யானைகள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு, அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இந்நிலையில், நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, சானமாவு வனப்பகுதிக்கு 5 குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. இந்த யானைகள், தற்போது போடூர்பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன.

தகவலறிந்து வனத்துறையினர், பட்டாசு வெடித்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர். குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அறுவடை பருவத்தில் இங்கு வரும் யானைகள், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றன. இதை தடுக்க, உடனடியாக இந்த யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும்,’ என்றனர்.


Tags : Osur , Over 60 elephants camp near Hosur with cubs: Farmers fear
× RELATED ஒசூர், கிருஷ்ணகிரியில் 4...