அ.தி.மு.க சார்பில் வரும் 25ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக மாணவர் அணியின் சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் வருகிற 25ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்த தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது கடமையாகும். அன்னை தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 25ம் தேதி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களில் ‘வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்’ நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: