×

படிப்புடன் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

சென்னை: சென்னை மாநில கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,  தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் மற்றும் 1000 சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில், 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் ஒன்றரை லட்சம் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யூ.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசு பணிகளில் 2.1 சதவீதம் நபர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்.

ரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.இந்த மாநிலக் கல்லூரியில் சுமார் ரூ. 64 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவிலான கலையரங்கம் கட்டப்பட உள்ளது.  மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும். தொடர்ந்து, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டினை மாணவ, மாணவியருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகக் காட்சியினைத் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் வீரராகவ ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Minister ,Udayanidhi Stalin , Employment along with studies, competitive examination, to be prepared, student, Minister Udayanidhi Stalin, advice
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...