×

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பி வரும் மக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

* ஜிஎஸ்டி சாலை திணறியது
* சுங்கச்சாவடிகளில் 2.5 கி.மீ., தூரம் வாகனங்கள் அணிவகுப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னை திரும்பியதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் ெகாண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில், பண்டிகை விடுமுறை முடிந்து அவர்கள் நேற்று முன்தினம் மதியம் முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இவ்வாறு, சென்றவர்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்த வாகனத்திலும், ஏராளமான பொதுமக்கள் அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

தொடர் பண்டிகை விடுமுறை முடிந்து, மீண்டும் சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம் பொதுமக்கள் நேற்று சென்னைக்கு திரும்பியபடி இருந்தனர். இதில், சிறப்பு பேருந்துகள் தாம்பரம் பகுதிக்கு வந்ததால், தாம்பரம் - பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்ட போதிலும், அதிக அளவு கூட்டம் வந்ததால், மாநகர பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் முண்டியடித்து வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர  பேருந்துகளில் சென்றனர். தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க கனரக வாகனங்களை, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு செல்லும் வகையில் வண்டலூர் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டது. ஆம்னி பேருந்துகளை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. பெரும்பாலானோர் நேற்று முன்தினம் மதியம் முதல் கார்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பியதால் நள்ளிரவு வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் பல  கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் தவித்து  வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புலிப்பாக்கம்  பகுதியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வரை சுமார் இரண்டு கிலோ மீட்டார்  தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனகள் அணிவகுத்து நின்றன.
அச்சிறுப்பாக்கம்  அடுத்த தொழுப்பேடு ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் பல கி.மீ. தூரத்துக்கு  வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் ஊர்ந்து செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  

இந்த பகுதியில் புதுச்சேரி, திருவண்ணாமலை, திருச்சி, சென்னை மார்க்கமாக  செல்லும் வாகனங்கள் அனைத்தும் சங்கமிப்பதால் மேலும் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்தனர். சென்னை அருகே உள்ள  தைலாவரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி கூட்டு சாலை,  கூடுவாஞ்சேரி-நெல்லிகுப்பம் சாலை, வண்டலூர், ஓட்டேரி, பெருங்களத்தூர்,  வண்டலூர், கேளம்பாக்கம் சாலையிலும் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  மக்கள் தவித்தனர்.


Tags : Chennai ,Pongal festive series , Pongal festival, continuous holiday, traffic jam
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...