ஒன்றிய அரசு அறிவுறுத்தல் எதிரொலி தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நான் பரிந்துரை செய்யவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டின் பெயரை நான் மாற்றுவதற்கு பரிந்துரை செய்தது போல் விவாதம் செய்வது யதார்த்தத்துக்கு புறம்பானது’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, 2 வாரங்களுக்குப் பிறகு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் ஒரு விழாவில் பேசியபோது, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று கூறினார். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சை பொருளாக மாறியது. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கடந்த 9ம் தேதி கவர்னர் உரையாற்றும்போது, தமிழ்நாடு அரசு அச்சடித்து கொடுத்த தமிழ்நாடு உள்ளிட்ட வாசகங்களை குறிப்பிடுவதை தவிர்த்தார். பின்னர் கடந்த 12ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்பதற்கு பதில், ‘தமிழக ஆளுநர்’ என்ற வாசகமும், தமிழ்நாடு அரசு முத்திரைக்கு பதில், ஒன்றிய அரசின் முத்திரையும் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பாமக ஆகிய கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த பொங்கல் விழாவை புறக்கணித்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக எம்பிக்கள் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடமும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து குடியரசு மாளிகை சார்பில் ஆளுநரிடம் விளக்கம் கேட்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அவசரமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரிலேயே ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையே நடைபெறும் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கவே, அவர் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காரணம், தமிழ்நாடு ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழக பாஜவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி பாஜ தலைமை கருதுகிறது. அதனால்தான், ஆளுநரிடம் இதுபற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் ஒரு செய்தி குறிப்பு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:

2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி - தமிழ் சங்கமும் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில் ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Related Stories: