கொரோனாவை வெல்லுமா வீட்டு வைத்தியம்?!

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா தொற்று பரவல் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகைகள் முக்கிய பங்கு வகிப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல், நமது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவை பல்வேறு மூலிகை வைத்தியங்கள் மற்றும் பாட்டி சமையல் குறிப்புகளால் நிரம்பி வழிகின்றன. இவற்றில் பல மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே பொது மக்களால் வழக்கமான அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலிகை மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் போன்றவை ஓரளவிற்கு நல்லது. ஆனால், இவை ஒருவருக்கு உள்ள அறிகுறிகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவைப் பொறுத்தது. இது சம்பந்தமாக எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் தினமும் மூலிகை நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது என்பது உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நெஞ்செரிச்சல், வீக்கம், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நோய் பாதிப்பு உள்ள ஒருவர் அதிக அளவில் மூலிகை மற்றும் அலோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது அது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளில் எதிர்மறையான பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. பலர் அவர்களின் உடலுக்கு சம்பந்தமில்லாமல் தேவையில்லாமல் அதிக அளவில் மூலிகை மருந்துகளை எடுத்து வருகிறார்கள். இவை இரைப்பைக் குழாயில் ஏற்கனவே உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவை முழுமையாகக் குறைக்கிறது.  

 

இந்தியாவில் நாம் ஏற்கனவே நமது அன்றாட உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை நிறைய எடுத்து வருகிறோம். ஏற்கனவே உடல் ஆரோக்கியம் உள்ள ஒருவர் அதிக மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்வது என்பது அவரது நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது செய்யாது. ஆனால், மேலும் அதை மோசமாக்கும். எனவே, பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புவோர், தற்போதைய சூழலில் சீரான இடைவெளியில் மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளுடன் சமச்சீர் உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துவதே நல்லது.

Related Stories: