ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு பாரதிய ஜனதா தனித்து போட்டி?

* தொண்டர்கள் வலியுறுத்தல் எதிரொலியாக அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

* 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அண்ணாமலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியதால், அவர் போட்டியிடுவார் என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 14 பேர் கொண்ட குழுவையும் அண்ணாமாலை அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. தமிழக அரசியலில் இந்த இடைத்தேர்தல் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரைமைப்பின்போது புதிதாக  உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இதுவரை 3 சட்டப் பேரவை  தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 2011 மற்றும் 2016ம் ஆண்டு  தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டு முறை தவறவிட்ட ஈரோடு  கிழக்கு தொகுதியை கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்  கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில், தற்போது அதிமுகவில் தலைமை யாருக்கு என்ற பிரச்சினை நிலவுகிறது. எனவே, கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பம் பி- யில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலிலும் அதே பிரச்னையை அதிமுக சந்திக்கும் என்றே கூறப்படுகிறது.   இந்நிலையில், பாஜவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது. டிவிட்டர் பதிவுகளில் மாறி மாறி தங்கள் காரசார விவாதங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களது மோதல் விவகாரம் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டு பதிவு போட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   

அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தமிழ்நாட்டின் மகள், நீங்க தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்’’ என்று கூறியிருந்தார்.  காயத்ரி ரகுராமின் இந்த பதிவு பாஜவினர் மத்தியில் மட்டுமல்ல தமிழக அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், காயத்ரி ரகுராமின் சவாலை அண்ணாமலை ஏற்பாரா என்ற விவாதம் அரசியல் விமர்ச்சகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது. பாஜவினரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜவினர் சிலர் கூறுகையில், ‘‘கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நடிகை சவால் விடுகிறார்?. அவருக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அவரது சவாலை ஏற்று அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். அண்ணாமலைன்னா யாருன்னு அவருக்கு காட்டினால் தான் இதுபோன்றவர்களுக்கு தலைவரது பெருமை தெரிய வரும். அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்களா என்பது தெரியவில்லை. கூட்டணி சார்பில் பாஜவுக்கு வாய்பு தர வேண்டும். அதிலும் அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை உள்ளதால் இரு தலைவர்களும் பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ளதாக அண்ணாமலை கூறிவருவதால், மற்ற பாஜ தலைவர்களும் அண்ணாமலையே போட்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜ 5% ஓட்டு வாங்கியுள்ளது. இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசினர். குறிப்பாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளராக யாரை நிறுத்துவது, அதிமுக சார்பிலா அல்லது பாஜ சார்பிலா என்பது குறித்தும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 14 பேர் கொண்ட கமிட்டியை அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனால் பாஜ தனித்துப் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பும் வௌியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி, பாஜ சொல்படி நடக்காமல் இருப்பதால், அவருக்கு மக்களவை தேர்தலில் செக் வைப்பதற்காக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  பாஜ இந்த இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதால், தனித்து போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Related Stories: