×

திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ல் தேர்தல்

* மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை
* தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைந்ததையொட்டி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
தமிழ்நாட்டில், ஈரோடு கிழக்கு தொகுதி என்பது கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறுவரையறையின் போது உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பளார் திருமகன் ஈவெரா (46), திமுக கூட்டணியில் நின்று அபார வெற்றி பெற்றார். இவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கொள்ளு பேரனும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஒன்றிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் ஆவார்.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இது, தமிழக அரசியலில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த தேர்தல் விதிமுறையின்படி, தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டபேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலோடு இணைத்து தமிழ் நாட்டின், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 31ம் தேதி முதல் தொடங்கும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. பிப்ரவரி 27ம் தேதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவிப்பை தொடர்ந்து அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள்  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் புதிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. இது தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளரை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்கு சாவடிகள் உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 1,10,713, பெண்கள் - 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் 23 பேர். இடைத்தேர்தலின்போது அங்கு 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு இருக்கும் தொகுதியாக இருந்தால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Erode East Constituency ,Evera , Election on February 27 for Erode East Constituency vacated by the death of Mr. Evera
× RELATED பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையின்...