பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் 1 மணிநேரத்தில் மீட்பு: காவலரை நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு

சென்னை: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர் சுரேஷ் என்பவரை கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். உழவர் திருநாள் அன்று வெகு நேரம் கழித்து இரவு வீட்டிற்கு வந்துள்ளான். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டான்.

வீட்டில் மகன் இல்லாததை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மகனின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் அதிரடியாக ரோந்து வாகனங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற சிறுவனை சூளைமேடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் சுரேஷ் கவனித்து அவனை அழைத்து விசாரித்தார்.

அப்போது தான், அவன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. உடனே காவலர் சுரேஷ் சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார் சிறுவனை மீட்டனர். பிறகு சிறுவனின் பெற்றோரை நேரில் அழைத்து போலீசார் ஆலோசனைகள் வழங்கி சிறுவனை அனுப்பி வைத்தனர். சிறுவன் மாயமாகி புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட சூளைமேடு காவல் நிலைய காவலர் சுரேஷை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: