கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து: 3 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 64வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது அலி (33). இவர், நேற்று முன்தினம் மதியம் 11 மணியளவில் முத்தமிழ் நகர் 3வது பிளாக் வாட்டர் டேங்க் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் மது குடித்துக் கொண்டிருந்த 3 பேர் முகமது அலியிடம் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளனர். திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உடனே, 3 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது அலியை சரமாரியாக குத்தி உள்ளனர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகமது அலியை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலையில் 5 தையல், கை உள்ளிட்ட இடங்களில் எட்டு தையல்கள் போடப்பட்டு முகமது அலி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து, புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பா (எ) ரகுபதி (30), கொடுங்கையூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28), வியாசர்பாடி எஸ்ஏ காலனி பகுதியை சேர்ந்த அருண் (31) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இதில், கருப்பா (எ) ரகுபதி, பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பிரிவில் உள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: