தலைமை செயலகம் எதிரே ஆட்டோ கவிழ்ந்து விபத்து தலைமை செயலாளர் இறையன்பு காயமடைந்த டிரைவரை மீட்டார்: மற்றொரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

சென்னை: தலைமை செயலகம் எதிரே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று கவிழ்ந்து, டிரைவர் படுகாயமடைந்தார். இதை பார்த்த தலைமை செயலாளர் இறையன்பு படுகாயமடைந்த டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை கொருக்குபேட்டை பாரதி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் விஜி(40). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் காமராஜர் சாலையில் இருந்து போர் நினைவு சின்னம் வழியாக பிராட்வே நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தலைமை செயலகம் இன்கேட் அருகே, ஆட்டோ செல்லும் போது திடீரென ஆட்டோவின் தார்பாய் கிழிந்தது. இதை கவனித்த டிரைவர் விஜி, ஆட்டோவை ஓட்டியபடி தார்பாயை பிடிக்க முயன்றார். இதில் திடீரென ஆட்டோ, டிரைவர் விஜியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஆட்டோ டிரைவர் விஜி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அப்போது, தலைமை செயலாகத்தில் இருந்து வெளியே வந்த தலைமை செயலாளர் இறையன்பு ஆட்டோ விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, தனது காரில் இருந்து இறங்கி ஓடி வந்து, விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் விஜியை மீட்டு மற்றொரு ஆட்டோவில் சிகிச்ைசக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை, தலைமை செயலாளர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: