×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கெமிக்கல், காஸ் ஏஜென்சியில் பயங்கர தீ விபத்து: 2 மணிநேரம் போராடி அணைப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள காஸ் ஏஜென்சி மற்றும் கெமிக்கல் கம்பெனியில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்படடது. சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ராம்குமார் (56) என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க், எம்.ஜெ.வி இந்தியன் காஸ் ஏஜென்சி மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகத்தை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கம்பெனியின் அனைத்து அலுவலகத்தையும் மூடியுள்ளார். பின்பு இரவு செல்வராஜ் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் நிறுவனத்திற்கு சொந்தமான ரெக்கார்டு ரூமில் தீப்பற்றி எரிவதை கண்டு செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென எரிய துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜெ.ெஜ. நகர், வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 40 பேர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் ஏஜென்சியில் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் உருளைகளை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambattur Industrial Estate , Fire breaks out at Chemical, Gas agency in Ambattur Industrial Estate: 2 hours of fighting to put out
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...