ஆஸி. ஓபன் டென்னிஸ் நடால் அதிர்ச்சி தோல்வி: காயத்தால் அவதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். 2வது சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் (27 வயது, 63வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் நடால் (36 வயது, 2வது ரேங்க்) 4-6, 4-6 என்ற கணக்கில் முதல் 2 செட்களையும் இழந்து பின்தங்கினார். 2வது செட்டின்போது இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார். 3வது செட்டில் கடுமையாகப் போராடினாலும், காயம் காரணமாக தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய நடால் 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 2 மணி, 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

முன்னணி வீரர்கள் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆகர் அலியஸிமி (கனடா), மெட்வதேவ் (ரஷ்யா), யானிக் சின்னர் (இத்தாலி), பிரான்செஸ் டியபோ (அமெரிக்கா), கோக்கினாகிஸ் (ஆஸி.) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்ரையர் பிரிவு 2வது சுற்றில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவை எளிதாக வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா, கோகோ காஃப், மேடிசன் கீஸ் (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்), கலினினா (உக்ரைன்), எலனா ரைபாகினா (ரஷ்யா), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்) ஆகியோர் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 2வது சுற்றுடன் வெளியேறினார்.

Related Stories: