×

ஆளுநர் வெளிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு; ஆளுநரின் விளக்கம் மழுப்பலாகவும், பின்வாங்குவது போல் நடிப்பதாகவும் உள்ளது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: ஆளுநர் விளக்கத்தை ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிராகரித்துள்ளார். தமிழ்நாடு என்பது அந்த காலத்தில் இல்லை என்று எந்த அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என கேள்வி எழுப்பிய முத்தரசன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தை தனது கருத்தாக ஆளுநர் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் வெளிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு. ஆர்.எஸ்.எஸ். கொள்கை, கருத்துக்களை வெளிப்படுத்தும் நபராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார். ஆளுநரின் விளக்கம் மழுப்பலாகவும், பின்வாங்குவது போல் நடிப்பதாகவும் உள்ளது. ஆளுநர் ரவி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.

பொங்கல் அழைப்பிதழில் தமிழகம்; விளக்கம் தராதது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.


பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளிக்காதது ஏன்? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் கூறியுள்ள விளக்கம் புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது. மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார். ஆளுநர் குறிப்பிட்டது போல் எந்தக் காலத்திலும் தமிழ்நாடு என்பது இல்லாமல் இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. சாடியுள்ளார்.

சரியான எதிர்வினை காரணமாகவே ஆளுநர் விளக்கம்: ரவிக்குமார் எம்.பி.


ஆளுநர் செயல்பாட்டுக்கு அரசு சரியான எதிர்வினையாற்றியதால் தான் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை விளக்கம் மழுப்பலாகவே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:

நாடா? அகமா? என அன்று விவாதத்தைக் கிளப்பியது குதர்க்கவாதம். நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது என இன்று விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம். தனது பிழையை உணர்ந்து, வருந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர். தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Governor ,RSS , Governor, RSS Position, opinion of political party leaders
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...