உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வேறு மாவட்டத்தினர் ஜெயிச்சது மகிழ்ச்சி-மதுரை வீரர்கள் பெருமிதம்

மதுரை : உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வேறு மாவட்டத்தினர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக நேற்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 9 சுற்றுகளே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதிக காளைகள் களமிறங்கும் வகையில், 10 சுற்றுகள் நடத்தப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நேற்று காளைகளை அடக்கி, சிவகங்கை மாவட்டத்தின் 2 பேர் முதல் இரு இடங்களையும், சிறந்த காளைகளுக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டத்தின் இருவரும், முதல் இரண்டாம் பரிசுகளை பெற்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இவர்களுக்க கேடயமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறும்போது, ‘‘யாரையும் வேறு பகுதியைச் சேர்ந்தவர்களாக நாங்கள் பார்ப்பதில்லை. ஒரு சக வெற்றி வீரராக, அவருடைய வெற்றியைச் சேர்ந்து கொண்டாடுபவர்களாகவே இருக்கிறோம். தமிழகத்தின் அத்தனை பேரும் பங்கேற்று இங்கே பரிசுகள் வாங்கிப் போக வேண்டும். அதுதான் எங்கள் ஆசை’’ என்றனர்.

25 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள்

மதுரையில் பொங்கல் தினத்தில் அவனியாபுரம் துவங்கி, பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டிற்கும், வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 25ஆயிரம் பேருக்கு உணவுபொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் இந்த உணவு பொட்டலங்கள் தயாரி்தது விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக இரவில் போலீசார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், காளைகளின் உரிமையாளர்கள் எனவும் இந்த உணவு பரிமாறப்பட்டது. அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் இந்த உணவு விநியோகம் நடந்தது.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்(40), சத்திரப்பட்டி மஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகுபதி(24), மண்ணனூர் ஆறுமுகம்(52), உசிலம்பட்டி சீனிவாசன்(45), பார்வையாளர். மதுரை கீழவைத்தியநாதபுரம் சிவகுமார்(26), மதுரை பாண்டியராஜன்(24), மேலக்கால் தெற்குதெரு கார்த்திக் (22), நெய்க்காரப்பட்டி சிவபாலன்(23), நத்தம் சாணார்பட்டி சிவமணி(23), உசிலம்பட்டி செல்லப்பாண்டி(26), ஆண்டாள் கொட்டாரம் ராமதுரை(45) உள்பட 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கார்த்திக், சீனிவாசன் ஆகியோர் கவலைக்கிடமான முறையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சுண்டல் விநியோகித்த வங்கி ஊழியர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அதிகாலை முதலே காளைகளை அதன் உரிமையாளர்கள் வரிசையாக அழைத்து வந்த நின்றனர். இதனையறிந்த அலங்காநல்லூரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் அகிலாண்டேஸ்வர் என்பவர் வீட்டில் சுண்டல் தயாரித்து கொண்டு வந்திருந்தார் அவர் வரிசையில் காளைகளை அழைத்து வந்த காளை உரிமையாளர்களுக்கு சுண்டல் வழங்கி, ‘வென்று வர வேண்டுகிறேன்’ என்று வாழ்த்தினார். இந்நிகழ்வு அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

ஜல்லிக்கட்டு பெருமையுடன், சரித்திரம் பேசும் அலங்காநல்லூர்

நேற்று உலகப்புகழ் ஜல்லிக்கட்டு நடந்த அலங்காநல்லூரானது அக்காலத்தில் ‘அலங்கார நல்லூர்’ என்றிருந்து காலப்போக்கில் இவ்வூர் ‘அலங்கா நல்லூர்’ ஆனது என்கின்றனர். சித்திரை நாளில் மதுரை வைகையாற்றுக்குள் இறங்கும் கள்ளழகர், அன்றைக்கு இவ்வூரிலிருந்து 30கிமீட்டர் தூரத்திலிருக்கும் தேனூர் வைகையாற்றில்தான் இறங்கி வந்தார். அழகர்கோவிலில் இருந்து தோள் சுமையில் தேனூர் வருகிற கள்ளழகரையும், பக்தர்களையும் வரவேற்று இவ்வூரின் 400ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான முனியாண்டி கோயில் பகுதியில் இறக்கி வைத்து இளைப்பாறச் செய்வது நடந்தது.

மேலும் இந்த முனியாண்டி கோயிலில் வைத்தே அன்றைக்கு கள்ளழகருக்கு பூக்களால் அலங்காரம் நடத்தப்பட்டது. அழகரை சுமக்கிற பல்லக்கும் இங்கு வைத்தே அலங்கரிக்கப்பட்டது. இப்படி அலங்காரம் நடந்ததால் இப்பகுதி ‘அலங்கார நல்லூர்’ ஆனது. தேனூர் ஆற்றில் இறங்கும் அழகரை மதுரை வைகையாற்றில் இறங்கும் விதமாக திருமலைநாயக்கர் பிற்காலத்தில் மாற்றியமைத்தார். சரித்திரச் சிறப்புக்குரிய அலங்காநல்லூரில் தை மாதம் நடக்கும் இவ்வூர் ஜல்லிக்கட்டு தமிழர் வீரவிளையாட்டை காட்டுவதோடு, இவ்வூர் பகுதிகளில் இன்றும் எஞ்சி இருக்கும் கிராமிய கலாச்சாரத்தை அறிவிக்கும் ஒரு பண்பாட்டு அடையாளமாக உலகின் காதுகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் வந்திருந்து பங்களித்தன. மதுரை உசிலம்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமல்லாது, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சை, சிவகங்கை, கோவில்பட்டி, தேனி, திண்டுக்கல், கடலூர், திருச்சி என ஊர்கள் பட்டியல் நீள்கிறது.

மாடுபிடி வீரர்களுக்கு என்னென்ன பரிசோதனை?

மாடுபிடி வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வளர்மதி தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து, போட்டிக் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பரிசோதனை விபரம் வருமாறு: வீரர்கள் முதலில் தனக்கு கொரோனா இல்லை என்ற சான்றுடனும், இரண்டு தவணை கொரேனா தடுப்பூசி போட்டதற்கான ஆவண நகலும் சரியானதா என பார்க்கப்பட்டது.

ஆதார் கார்டு நகல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட டோக்கன் சரிபார்க்கப்பட்டது. பின்னர் மது அருந்தியுள்ளார்களா என காவலர்கள் கருவிகள் மூலம் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்களா எனவும் உறுதி செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர் எடை 50 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதால் அதுகுறித்தும், உடலில் வேறு காயங்கள் ஏதும் இருக்கிறதா எனவும் சோதனை செய்யப்பட்டது.

இத்துடன், உடலில் ரத்த அழுத்த அளவு சரிபார்க்கப்பட்டதுடன், வீிரர்களின் உயரம் 150 செ.மீ. இருப்பதும் உறுதி செய்யப்பட்டு, வீரர்களிடம் இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வீரர்களுக்கு வருவாய்துறை மூலம் வரிசை எண் கொண்ட பனியன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு கலர் பனியன் மாற்றி போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் வீரர்கள் அடுத்தடுத்து பரிசோதனை செய்யப்பட்டு களம் கண்டனர்.

Related Stories: