ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு-பொங்கல் முடிந்து ஊர் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி

கோவை :  பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கு வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கும் வந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால், கோவைக்கு வந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. இதில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களில் ஒரு நபருக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஏசி பஸ்களில் சீட் ரூ.1,200 முதல் ரூ.1600 வரையும், ஏசி இல்லாத சீட் ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கோவையில் இருந்து பெங்களூருக்கு ரூ.1,100 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் கட்டணம் காரணமாக கோவை வந்தவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

அனைத்து பேருந்துகளிலும் சீட்கள் நிரம்பியது. இதனால் பலர் ரயில்களில் முன்பதிவு இல்லாத சீட்களில் பயணம் செய்தனர். இந்நிலையில், பெரும்பாலானவர்கள் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், நாளை முதல் சென்னைக்கு ஏசி பஸ்களில் படுக்கை வசதியுடன் ரூ.900 முதல் ரூ.1,500க்கு டிக்கெட் ஆன்லைன்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

கட்டணம் குறைவு என்பதால் பலர் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி கோவையில் இருந்து ஈரோடு, சேலம், திருச்சி, தேனி, ஊட்டி உள்ளிட்ட சொந்த ஊருக்கு சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் நேற்று மீண்டும் பேருந்துகள் மூலம் கோவை திரும்பினர். இதனால், அரசு சிறப்பு பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் இருந்தது. அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வடமாநிலத்தவர்கள் ஊர் திரும்பினர்

கோவை மாவட்டத்தில் மேம்பாலம் கட்டுமான பணிகள் முதல் வீடுகள் கட்டும் பணிகள், தொழிற்சாலைகளில் அதிகளவில் வட மாநில பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை முன்னிட்டு கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்த வடமாநிலத்தவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், இவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று பணிக்கு செல்லவுள்ள நிலையில், நேற்று ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற வடமாநிலத்தவர்கள் பலர் கோவை திரும்பினர்.

Related Stories: