திருப்பதி : சந்திரகிரி அடுத்த தொண்டவாடா அருகே 1.60 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று முன்தினம் வழங்கினார். திருப்பதி மாவட்டம், சந்திரகிரி அடுத்த தொண்டவாடா அருகே உள்ள நாராயணி கார்டனில் சங்கராந்தியை(பொங்கல்) முன்னிட்டு 1.60 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமை தாங்கி வேட்டி, சேலைகளை வழங்கினார். தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகனை லட்சியமாக எடுத்து கொண்ட எம்எல்ஏ பாஸ்கர் சந்திரகிரியில் ஜாதி, மதம், கட்சி வேறுபாடின்றி பரிசுகள் வழங்கி மக்கள் மனதில் ஸ்திரமான இடத்தை பெற்றுள்ளார். நலம் மற்றும் வளர்ச்சியில் தனது தொகுதியை சிறந்ததாக ஆக்கி மக்களுக்கு பொறுப்பாக இருக்கும் எம்எல்ஏக்கு கடவுள் அருள் கிடைக்க வேண்டும். தொகுதி மக்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது ஒரு வித பரிசுகளை அனுப்பியதோடு, கொரோனா போன்ற பேரிடரின் போது முகமூடிகள், சானிடைசர்கள், வைட்டமின் சி மாத்திரைகள், காய்கறிகள், கோழி முட்டை, ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்றவற்றையும் வழங்கினார். கொரோனாவால் பாதித்த பலருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பாதுகாக்கப்பட்டது. பிறகு, தொகுதி மக்கள் அனைவருக்கும் ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுத்து, கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றினார்.
கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. ராயலா ஏரி நிரம்பினால் தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி தாங்களாகவே அனைத்தையும் பார்த்து கொண்டு, இரவு பகலாக கடுமையாக உழைத்து, குளத்தை நிரப்பி, அனைவருக்கும் தைரியம் தருகிறார். ஆபத்து காலங்களில் மட்டுமின்றி, உகாதி, தீபாவளி, சங்கராந்தி போன்ற முக்கிய பண்டிகைகளின் போதும், தன் மக்களின் கண்களில் மகிழ்ச்சியை காண இனிப்புகள், உடைகள் போன்றவற்றை பரிசாக அனுப்புகிறார். சமீபத்தில், 1.60 லட்சம் குடும்பங்களுக்கு ஆடைகளை அனுப்பி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, எம்எல்ஏ பாஸ்கர் பேசுகையில், ‘தொடர்ந்து மக்களுக்கு ஏதாவது ஒரு சேவை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தனது வருமானத்தில் 70 சதவீதத்தை தொகுதி மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக செலவிடுகிறேன். கஷ்ட காலங்களில் மட்டுமல்ல. மகிழ்ச்சியிலும் பகிர்ந்து கொள்ள பரிசுகளை அனுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கிராமங்களில் வளர்ச்சி பணிகளை செய்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்’ என்றார்.