10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கும் வைகை அணை பூங்காவை சீரமைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தேனி : தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமான வைகை அணையின் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களாக சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளிஅருவி, மேகமலை, குரங்கனி உள்ளிட்ட மலைவாசஸ்தலங்கள் மற்றும் அருவி பகுதிகள் உள்ளன. இது தவிர ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வைகை அணை பூங்கா உள்ளது.

இதில் ஆண்டுமுழுவதும் வைகை அணை பூங்காவிற்கு தேனி மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

காமராஜர் முதல்அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட இந்த அணை பகுதியில் வடகரை மற்றும் தென்கரை என இருபகுதிகளில் சிறுவர் பூங்காக்கள் உள்ளன.

இப்பூங்காக்களில் சிறுவர்களை கவரும்வகையில் ஊஞ்சல்கள், சறுக்குகள், யானை சறுக்கு, சிறுவர்ரயில், நீரூற்றுகள், அழகிய பூந்தோட்டங்கள், கண் கவரும் வகையிலான அரிய பலவகை சிற்பக்கலைகளுடன் கூடிய சிலைகள், மிருககாட்சி சாலை, இசை நடன நீரூற்று, படகுசவாரி, தமிழ்நாடு வரைபட மாதிரி தலம் என ஏராளமான பொழுதுபோக்கு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் பூங்காக்களில் எரியும் மின்விளக்குகளை காணவே தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.வைகை அணை சுற்றுலா தலம் மேம்பாட்டிற்காக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்டத்தில், வைகைஅணை பகுதியில் உள்ள இரு சிறுவர் பூங்காக்களிலும் சிதிலமடைந்திருந்த அனைத்து சிலைகளும் சீரமைக்கப்பட்டன. படகு சவாரிக்கான படகு துறை, இசை நடன நீரூற்று, நீரூற்றுகள் சீரமைக்கப்பட்டன.

மிகஅழகிய முறையில் சீரமைக்கப்பட்ட வைகை அணை பூங்காவானது பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் தேக்கப்படும் நீர்மட்டம், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீர் மேலாண்மை மட்டுமல்லாமல் அணை பூங்கா பராமரிப்பு பணிகளையும் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறையாக பூங்காவை பராமரிக்கத் தவறிவிட்டனர்.

 இதன்காரணமாக அணை பூங்கா பகுதியில் உள்ள ஏராளமான சிலைகள் உடைந்து சிதிலமடைந்து விட்டன. கைகள் உடைந்தும், கால்கள் உடைந்தும், தலையில்லாமலும் சிலைகள் பரிதாபமான முறையில் உள்ளன. குழந்தைகள் விளையாடும் சறுக்குகளில் தகரங்கள் கிழிந்தும், படிக்கற்கள் இல்லாமலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. படகு சவாரிக்கான பகுதியில் படகுகள் சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் உருக்குலைந்து போயுள்ளன. இசை நடன நீரூற்று பகுதியிலும் தண்ணீர் நிரப்பப்படாமல் நடன நீரூற்று செயல்படாமல் உள்ளது. மிருகக்காட்சி சாலையில் எந்த மிருகமும் இல்லாமல் வெற்றுக்கண்காட்சியாக மிருக கண்காட்சி சாலை உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு மிக உதவிகரமாக விளங்கக் கூடிய சுற்றுலாவை மேம்படுத்த இதுபோன்ற சுற்றுலாத் தலங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது, இதனை பராமரிக்கும் பொறுப்பும் சுற்றுலாத் துறையிடம் இருந்தால் சுற்றுலா மையங்கள் முறையாக பராமரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கொடைக்கானலில் உள்ள படகுத்துறை, முட்டுக்காட்டில் உள்ள படகுத்துறை, கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் உள்ள படகுத்துறை போன்றவை நேரடியாக சுற்றுலாத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. ஆனால், வைகை அணை உள்ளிட்ட அணைப்பகுதி பூங்காக்கள் பொதுப்பணித் துறையிடம் உள்ளதால், நீர்மேலாண்மையை கவனத்தில் கொள்ளும் இத்துறையினர் சுற்றுலா பயணிகள் நலனில் கவனத்தை செலுத்த தவறும் நிலை உள்ளது.இது குறித்து சுற்றுலாத் துறை அலுவலர் ஒருவரிடம் பேசியபோது, அணைப்பகுதிகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இதுவரை பொதுப்பணித்துறையே பராமரித்து வருகிறது. ஆனால் அணைப் பூங்காக்களுக்கு அளிக்கப்படும் நிதியானது சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படுகிறது.

இந்நிதியை கொண்டு உருவாக்கப்படும் சுற்றுலா செலவுகள் முறையாக பராமரிக்கப்படாததால், நிதி வீணாகும் நிலையும், சுற்றுலா பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றமும் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் சுற்றுலா வளர்ச்சிக்கழகங்கள் மூலமாக நிதி ஒதுக்கப்படும்போது, பொதுப்பணித் துறை வசம் உள்ள இடங்கள் சுற்றுலா வளர்ச்சித் துறையிடம் ஒப்படைப்பு செய்தால், முறையாக பராமரித்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்றார்.

Related Stories: