×

நெல்லை மண்டல அலுவலகத்தில் இடிந்து விழும் நிலையில் டாஸ்மாக் குடோன்கள்-புதிதாக கட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நெல்லை :  நெல்லை டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள குடோன்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிதாக குடோன்களை அமைக்க வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 161 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் முக்கிய வருவாயை ஈட்டி தருவது டாஸ்மாக் கடைகள்தான்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்  உள்ளிட்ட நாட்களில் இலக்கு நிர்ணயித்து மதுவிற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகையொட்டி நடந்த விற்பனையில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு செலவிடுகிறது. டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கவும் மதுபானம் விநியோகம் செய்வதை முறைபடுத்தவும் மண்டல மேலாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன.

தமிழகம் முழுவதும் 43 டாஸ்மாக் குடோன்கள் உள்ளன. இதில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 161 டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபானங்கள், பீர் வகைகளை ஸ்டாக் வைப்பதற்காக நெல்லை அடுத்துள்ள முன்னீர்பள்ளம் அருகே சுமார் 6 ஏக்கரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகமும், 35 ஆயிரம் மதுபான கேஸ்களை இருப்பு வைக்கும் வகையில் குடோன்கள் அமைந்துள்ளன.

இந்த குடோன்கள் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. தற்போது குடோன்களின் பக்கவாட்டு சுவர், மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. இங்கு பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்ட பின்பும் பல லாரிகளில் இருந்து இறக்கி வைக்க போதிய குடோன்கள் இல்லாததால் வளாகத்தில் சரக்குகளுடன் பல நாட்களாக லாரிகள் அணிவகுத்து காத்திருக்கும் நிலையும் உள்ளது.

இதனால் பழுதான பழைய குடோன்களுக்கு பதிலாக கூடுதல் மதுவகைகளை ஸ்டாக் வைக்க புதிய குடோன்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடோன்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு புதிய குடோன்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tasmak kudons , Nellai : As the existing godowns at Tasmac Zonal Office, Nellai are in a state of collapse, new godowns are to be constructed.
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...