எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ்: கம்மம் நகரில் நடக்கும் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. கெஜ்ரிவால், பினராயி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரில் இந்த பொதுக்கூட்டதற்கு பிஆர்எஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக தெலுங்கானா அரசின் கண் பரிசோதனை திட்டமான கண்டே வெளுகுவின் 2ம் கட்ட தொடக்க விழாவிலும் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தனது கட்சியின் பெயரை சந்திரசேகர ராவ் சமீபத்தில் பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றிய நிலையில் முதல் முறையாக நடைபெறும் இக்கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேசிய அளவில் ஒரு மாற்று அரசியலை ஏற்படுத்தும் முயற்சியை பிஆர்எஸ் கட்சி மேற்கொண்டுள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முக்கிய மைல் கல்லாக இருக்கும் எனவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: