×

குமரியிலிருந்து நெல்லைக்கு விற்பனைக்கு குவிந்த பழங்கள்-கிலோ ரூ.30க்கு விற்பனை

நெல்லை : பலாப்பழம் சீசன் துவங்கியதையடுத்து குமரி  மாவட்டத்திலிருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் சாலையில் குவிக்கப்பட்டு  விற்பனை செய்யப்படுகின்றன. பழ வகைகளில் மரத்தில் காய்க்கும் பெரிய பழமாக  பலாப்பழம் உள்ளது. இதனால் இதை பழங்களுக்கு ராஜாவாக அழைக்கின்றனர்.  தமிழகத்தில் பலாப்பழத்தை மேலே உள்ள சுளையை சாப்பிடுவதுடன், உள்ளே உள்ள  கொட்டையையும் உணவுக்கு பயன்படுத்துகின்றனர்.

அதிக வாசனை உள்ள இந்த  பலாப்பழம், சுமார் 10 கிலோ எடை வரை வளரும் தன்மையுடையது. அதன் உள்ளே  நூற்றுக்கும் மேற்பட்ட பலாச்சுளைகள் கிடைக்கின்றன. பலாப்பழத்தில்  நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம், மக்னீசியம், பொட்டாசியம், தாமிரம்  போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் உடலுக்கு நன்மை பயக்கும் ஆன்ட்டி  ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்து  காணப்படுகிறது. பலாப்பழத்தில் உள்ள கரோட்டின் எனப்படும் வேதிப்பொருள்  டைப்-2 நீரழிவு வராமல் பாதுகாக்க பெரிய அளவில் உதவுகிறது. சர்க்கரையை சீராக  வைக்க உதவுகிறது. ேகரளாவிலும் தமிழகத்தில் பண்ருட்டி, கன்னியாகுமரி  மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் பலா மரங்கள் அதிகம் உள்ளன.

இந்த  பலாப்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்  மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பலாப்பழங்கள் அதிக அளவில்  லாரிகளில் கொண்டு வரப்பட்டு நெல்லை மாநகர பகுதிகளில் வந்து குவிந்துள்ளன.  வர்க்கை, சக்கை என அழைக்கப்படும் இந்த பலாப்பழம், கிலோ ரூ.30 என்ற விலையில்  எடை போட்டு வழங்குகின்றனர். இதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  அடுத்து வரும் வாரங்களில் மேலும் அதிக அளவில் பலாப்பழங்கள் வர  வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kumari ,Kg , Paddy: Jackfruits brought from Kumari district to Nellie are piled on the road and sold after the start of the jackfruit season.
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...