×

நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பட்டா மாறுதலுக்கான புதிய மென்பொருள் செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனை உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், பட்டா மாறுதல் செய்யும் வகையில் செயலிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் தமிழ்நிலம் வலைதளத்தில் ()  நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவில் பொதுமக்கள் மனைகள் கிரையம் பெறும்போது ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியாக மனுக்கள் பெறப்படும் சூழல் இருந்து வருகிறது.  இவ்வாறு ஒரே மனைபிரிவில் (layout) உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனித்தனியே செல்லவேண்டிய சூழலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1.50 இலட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகிறது. அதில் பெரும்பாலான  மனுக்கள் மனைப்பிரிவைச் சார்ந்தவை.  இதனால்,  உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்பட்டு, மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும்.

இப்புதிய மென்பொருள் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும்.  மேலும், தனித்தனியே பொதுமக்கள் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்று அவர்களது இன்னல்கள் தவிர்க்கப்படும். மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா  போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு  அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும்.

இதனால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்க இயலும். மேலும், இதுபோன்ற பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவிர்க்கப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் வருவாய் கிராமங்கள் நகரமயமாதலுக்குப் பின்னர் நகர்ப்புற தன்மையை அடைவதைத் தொடர்ந்து நகரளவைப் பணி மேற்கொள்ளப்படும். நகரளவைப் பணியின் போது வருவாய் ஆவணங்கள் நகர நிலஅளவை பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட்டு, புல எண்கள் வார்டு மற்றும் பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, புதிய நகர நிலஅளவை எண்கள் உருவாக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், மேற்படி புலங்களின் உடைமைதாரர்களின் உரிமை ஆவணங்கள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் புலங்களின் உரிமை குறித்த நில ஆவணங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இப்பணியானது 2007-ல் துவக்கப்பட்டு மாநிலத்திலுள்ள பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளில் 15 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மிகுந்த காலதாமதம் ஆவதன் காரணமாக குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்களை பெறுவதில் சிரமத்தை அளித்து வந்த நிலையில், மேற்படி வருவாய் பின்தொடர் பணி, நகரநிலவரித்திட்ட பணியினை குறைந்த காலத்திற்குள் முடித்திட ஏதுவாக தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) வாயிலாக தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருளை (New Software Application) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.  

இப்புதிய மென்பொருளின் பயனாக, வருவாய் பின்தொடர் பணியில் கைமுறை செயலாக்கம் (Manual processing) மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த விசாரணை அறிவிப்பு தயார் செய்வதிலிருந்து இறுதி அசல் ஆவணங்கள் தயாரித்தல் வரையிலான பணிகள் மற்றும் சிட்டா நகல் தயாரித்தல் ஆகிய படி நிலைகள் கணினிமயமாக்கப்பட்டு பணிகளை விரைவில் முடித்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், படி நிலைகள் கணினிமயமாக்கப்படுவதால் நிலவரித்திட்ட பணியாளர்களின் பணி சுமைகள் குறைக்கப்படுவதோடு, இந்த மென்பொருள் மூலம் தயார் செய்யப்படும் இறுதி ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் கொண்டதாக அமைவதுடன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்திலிருந்தே இப்பணிகளை நேரடியாக கண்காணிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வருவாய் பின்தொடர் பணி நடைபெற்று கொண்டிருக்கும். 9 மாநகராட்சிகள் மற்றும் 36 நகராட்சிகளின்  நகர நிலவரித்திட்ட அலகுகளில் மேற்படி மென்பொருள் நிறுவப்படும். இதன்மூலம் நகரப்பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள் இணைய தளம் மூலமாக விரைவில் கிடைத்திட பெரிய அளவில் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

Tags : Chief Minister ,M. K. Stalin , Chief Minister M.K.Stalin launched a new software application in the land surveying and land planning department.
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...