×

திருவொற்றியூர், எண்ணூர் கடலில் குளிக்க தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரை பகுதிகளில் குளித்த பலர் உயிரிழந்துள்ளதால் இப்பகுதிகளில் கடலில் குளிக்க கூடாது என்று தடை விதித்து இதற்கான அறிவிப்பு பலகையை கடற்கரை ஓரங்களில் சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் வைத்துள்ளனர். இந்நிலையில் பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கடற்கரையில், பொழுதுபோக்க வரும்பொழுது கடல் அலையில் விளையாடவும், குளிப்பதை தடுக்கவும் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் சரகத்துக்குட்பட்ட காவல் துறையை  சேர்ந்த 300 போலீசார் கடந்த 4 தினங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், எண்ணூர், தாழங்குப்பம் மற்றும் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுமிடம் என்பதால் அங்கே தடுப்பு வேலி அமைத்து பொதுமக்கள் கடற்கரை பகுதியையொட்டி செல்லாத வண்ணம் போலீசார் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதனால், மாதவரம், மணலி, புழல் போன்ற பகுதியில் இருந்து கடற்கரைக்கு விளையாட, குளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

துரைப்பாக்கம்: காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று காலை முதலே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையம், திரையரங்குகள், ரெஸ்டாரன்ட்கள், சுற்றுலா தலங்கள், கோயில்களில் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.இதன் காரணமாக நீலாங்கரை மற்றும் கானத்தூரில் பாதுகாப்பு நடவடிக்கையாக கடற்கரை, பொழுதுபோக்கு மையங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  

பொதுமக்கள் பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்ளில் பல்வேறு பகுதியிலிருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கறை கடற்கரைக்கு, தங்களது குடும்பத்தாருடன் வந்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் திருவான்மியூர், நீலாங்கரை மற்றும் கானத்தூர் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்கும் வகையில், ஆங்காங்கே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Tiruvottiyur ,Ennore , People are disappointed by the ban on bathing in Tiruvottiyur, Ennore sea
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்