×

சேறும் சகதியுமான மாநகராட்சி குளம்: சீரமைக்க மணலி மக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பம், பர்மா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இது, மழைநீர் சேமிப்பு குளமாக இருப்பதோடு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணி துவைப்பது, குளிப்பது போன்றவைகளுக்காகவும் பயன்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குளத்தில் குளித்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் சேறும் சகதியுமாக குளம் மாறிவிட்டது. இதனால் குளத்தில் குளிக்கும் சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு குளத்தில் குளித்த சுதாகர் என்ற 11 வயது சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தான். மேலும் ஆடு, மாடுகளும் சிக்கி இறந்து விடுகின்றன. எனவே, குளத்தை தூர்வாரி சீரமைத்து கரை அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, நேற்று முன்தினம் இந்த குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஒரு பசுமாடு சேற்றில் சிக்கி கரைக்கு வர முடியாமல் துடிதுடித்து இறந்தது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து செத்து மிதந்த பசுவை அப்புறப்படுத்தினர். தற்போது, சகதி அதிகமாகி விட்டதால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, இனியாவது குளத்தை சீரமைத்து மழைநீர் சேமிப்பு குளமாக மாற்ற மணலி மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muddy , Muddy corporation pool: Manali people demand to repair it
× RELATED கீழடி 8ம் கட்ட அகழாய்வு 4 சுடுமண் பானைகள் கண்டெடுப்பு