இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை

ஐதராபாத்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஐதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. சமீபத்தில் இலங்கையுடன் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அந்த தொடர் முடிந்து 2 நாட்களே ஆன நிலையில், அடுத்ததாக பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியின் சவாலை சந்திக்கிறது. சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல... ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து வருகிறது என்றால் மிகையல்ல. 2010ல் இருந்து உள்ளூரில் விளையாடிய 25 இருதரப்பு தொடர்களில், இந்தியா 22ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்தியா டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியையும் போட்டுத் தாக்குமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது, அனுபவ வீரர் கோஹ்லி தொடர்ச்சியாக சதங்கள் விளாசி பார்முக்கு திரும்பியுள்ளது, சிராஜ் வேகம் மற்றும் குல்தீப் சுழல் எதிரணி பேட்ஸேன்களுக்கு சிம்ம சொப்பனமாகி உள்ளது எல்லாம் இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள். இந்த தொடரில் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தீக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், நியூசிலாந்து சற்று அனுபவம் இல்லாத இளம் பட்டாளத்துடன் களமிறங்குகிறது என்றே சொல்லலாம். எனினும், வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய தொடரில் இந்தியா சறுக்கலை சந்தித்தது, நியூசிலாந்து வீரர்களுக்கு தெம்பை கொடுக்கும். கேப்டன் லாதம் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 65 ரன் குவித்துள்ளதும், நியூசி. அணிக்கு உற்சாகம் அளிக்கும் புள்ளிவிவரமாக அமைந்துள்ளது.

ஷ்ரேயாஸ் இல்லை: முதுகுப் பகுதியில் காயம் அடைந்துள்ள பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக, இந்திய அணியில் ரஜத் பத்திதார் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் இடத்தில் சூரியகுமார் யாதவ், ஓய்வளிக்கப்பட்டுள்ள அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படலாம். ஐதராபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளுமே அதற்கான வியூகத்தில் கூடுதல் கவனம் செலுத்தும். கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 4 வெற்றி, 1 தோல்வியும்; நியூசிலாந்து 3 வெற்றி, 2 தோல்வியும் கண்டுள்ளன. ஐதராபாத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் வென்று தொடரை வெற்றிகரமாகத் தொடங்க இரு அணிகளும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் (கேப்டன்), ஹர்திக் (துணை கேப்டன்), ஸ்ரீகர் பரத் (கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், இஷான் கிஷன் (கீப்பர்), விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ரஜத் பத்திதார், ஷாபாஸ் அகமது, ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், சூரியகுமார் யாதவ். நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், டக் பிரேஸ்வெல், மைகேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டிவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லோக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, ஈஷ் சோதி, பிளேர் டிக்னர்.

Related Stories: