×

அதிமுக கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டாம்: சசிகலாவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று கூறி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சசிகலா சொல்வதையே, ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஒன்றுபடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வு. அவர்களால் அதிமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்வு ஏற்படப்போவது கிடையாது.

எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார். அவர் ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் பயணிக்கிறது. சசிகலா யார், இதுபோன்ற கருத்தை சொல்வதற்கு? ஒருங்கிணைக்கும் வேலை செய்யப்போவதாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை ஒருங்கிணைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும். அது நல்ல விஷயம் தான். நாங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை. எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Jayakumar ,Sasikala , Don't poke your nose into AIADMK: Jayakumar condemns Sasikala
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா