கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நிறைவு: விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி பராமரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் கடந்த 2000 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு, ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த 2022 ஜூன் 6ம் தேதி தொடங்கியது. சிலையை சுற்றி 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகளாலான சாரம் அமைக்கப்பட்டது. முதலில் சிலையை  தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்து, இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சீரமைக்கும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் கொண்ட கலவை பூசும் பணி நடந்தது.

பின்னர் காகித கூழ் கலவை ஒட்டப்பட்டு, சிலையில் படிந்திருந்த உப்பை அகற்றும் பணி நடந்தது. அதன்பின் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தொடர்ந்து சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தை பிரிக்கும் பணியு் முடிந்தது. ஆனால் சாரத்துக்கான கட்டுமான பொருட்கள் பாறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றினால்தான் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும். சிலையின் அடிப்பகுதியை சுத்தம் செய்யும் பணி 2 நாட்களில் முடிவடைந்து விடும். இதையடுத்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து வெகுவிரைவில் சுற்றுலா பயணிகள் மீண்டும்  அனுமதிக்கப்படுவர் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: