பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பணம் தர மறுக்கும் ஒன்றிய அரசு: மேற்கு வங்க அரசு புகார்

கொல்கத்தா: பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படுகின்றது. இந்த திட்டத்தில் 60 சதவீதம் நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இந்நிலையில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை என தெரிகின்றது. இதனிடையே இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளதாகவும், திட்டத்திற்கான செலவினங்கள் குறித்த விவரங்களையும் ஒன்றிய அரசு மாநில அரசிடம் கேட்டு இருந்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், ‘‘ஒன்றிய அரசின் அனைத்து கேள்விகளுக்கும் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் 40சதவீத நிதியை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஒன்றிய அரசு விரைவில் நிதியை விடுவிக்காவிட்டால் மார்ச் 31க்குள் 11.5லட்சம் வீடுகள் கட்டும் பணியை முடிக்க இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: