ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லும்படி என் கழுத்தை அறுத்தாலும் நான் போக மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

ஹோசியார்பூர்: ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லும்படி என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் பேட்டி அளித்தார். அப்போது வருண்காந்தி எம்பி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றது போல் நீங்களும் செல்வீர்களா என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்து கூறியதாவது: ஆா்எஸ்எஸ் அலுவலகத்திற்கு நான் ஒருபோதும் போக மாட்டேன். நீங்கள் என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். எனது குடும்பத்திற்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அது ஒரு சிந்தனை அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் வருண் காந்தி பாஜவில் உள்ளார்.

அவர் என்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகிவிடும். அவர் ஆர்எஸ்எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்கு அது ஒத்துவராது. வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தம் உள்ளது. பத்திரிகைகள் மீது அழுத்தம் உள்ளது. அதிகாரத்துவத்தின் மீது அழுத்தம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் உள்ளது. அவர்கள் நீதித்துறை மீதும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

எனவே இது ஒரு அரசியல் கட்சிக்கும், மற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையிலான சண்டை அல்ல. அவர்களால் கைப்பற்றப்பட்ட அமைப்புகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தான் இப்போது சண்டை. அதில் ஒரு காரணி தான் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம். அதனால் தான் நாட்டில் இயல்பான ஜனநாயக செயல்முறைகளை இப்போது காண முடியவில்லை. வரும் தேர்தலில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பா.ஜவுக்கு பலத்த சரிவை தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ராகுலை கட்டிப்பிடிக்க முயற்சி

பஞ்சாப்பில் நேற்று நடந்த பேரணியில் திடீரென ஒருவர் ஓடிவந்து ராகுலை கட்டிப்பிடிக்க முயன்றார். இதுபாதுகாப்பு குறைபாடு காரணமா? என்று கேட்டதற்கு,’ எனக்கு அளிக்கும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. அதை ஏன் தவறு என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததாக நான் நினைக்கிறேன். அவர் சற்று உற்சாகமாக இருந்தார். அதில் எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன்பும் பலமுறை நடந்திருக்கிறது. நான் அதை பாதுகாப்பு குறைபாடு என்று கூறமாட்டேன்’ என்றார்.

* ஜம்முவில் யாத்திரைக்கு அனுமதி

ஜம்மு காஷ்மீரில் ராகுல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஜனவரி 30ம் தேதி ஷெர் இ காஷ்மீர் மைதானத்தில் இறுதிநாள் பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் 23 அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories: