நிபுணர் குழு பரிந்துரையை தொடர்ந்து கோவோவாக்ஸ் பூஸ்டருக்கு ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியை 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு 2021ம் ஆண்டு டிசம்பர்28ம் தேதி மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்தது. மேலும் 12வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதியும், 7 முதல் 11 வயது வரையிலானவர்களுக்கு பயன்படுத்தகடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதியும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார், கொரோனா தொற்று பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருவதால் 18வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரலுக்கு கடிதம்  எழுதி இருந்தார். இதனை தொடர்ந்து கோவோவாக்ஸ் பூஸ்டர் டோஸ் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருந்து தர கட்டுப்பாடு ஆணையத்தின் நிபுணர்கள் குழுவினர் கடந்த வாரம் ஆலோசித்தனர். பின்னர் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் வழங்கும் வகையில் அதற்கான சந்தை அங்கீகாரத்துக்கு பரிந்துரை செய்தனர். நிபுணர் குழு பரிந்துரையை தொடர்ந்து கோவோவாக்ஸ் சந்தை அங்கீகாரத்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: