×

150 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு வரும் 27ம் தேதி பிரதமருடன் மாணவர்கள் கலந்துரையாடல்: குழுவின் தமிழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் தகவல்

சென்னை: பிரதமர் மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது என்றும், இதில் 150 நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள் என்றும் குழுவின் தமிழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினார். பிரதமர் மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ‘தேர்வும் தெளிவும்’ என்ற தலைப்பில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இக்குழுவின் தமிழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கி அவர்களை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த 2018ம் ஆண்டு ஒரு புத்தகத்தை பிரதமர் மோடி எழுதினார். அது ‘பரீட்சைக்கு பயமேன்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த புத்தகம் பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகளை, வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மாணவர்கள் எதிர்கொள்ள உள்ளனர். மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கி, அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஜனவரி 27ம் தேதி, டெல்லியில், ‘தேர்வும் தெளிவும் 2023’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடலில் 150 நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இது உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் ‘தேர்வுத் திருவிழா’. இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்காக, பதிவு செய்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக நேரடியாக பிரதமரிடம் கேள்விகளை எழுப்பலாம். அதற்கு அவர் பதில் அளிப்பார்.

இதை முன்னிட்டு, பிரதமர் எழுதிய, ‘பரீட்சைக்கு பயமேன்’ புத்தகத்தின் கருப் பொருளைக் கொண்டு, மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.innovateindia.mygovt.in என்ற இணையதளம், Namo App வாயிலாக மாணவர்கள், பதிவு செய்து, தாங்கள் வரைந்த ஓவியங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் அனுப்பலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Tamil Nadu ,President ,ANS Prasad , Participants from 150 countries will hold a discussion with the Prime Minister on 27th: Tamil Nadu President ANS Prasad informed.
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்