நாளை மறுநாள் நடைபயணம்; காஷ்மீரில் ராகுலுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை

புதுடெல்லி: காஷ்மீருக்குள் நாளை மறுநாள் ராகுலின் நடைபயணம் இருப்பதால், பாதுகாப்பு அமைப்புகள் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாப்பில் உள்ளது. இந்த நடைபயண குழுவினர்,  லகான்பூரிலிருந்து கத்துவா, சம்பா வழியாக ஜம்முவின் சத்வாரி சவுக்கை  வரும் 19ம் தேதி அடைவார்கள். அவர்கள் அன்று முதல் 30ம் தேதி வரை ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.

தொடர்ந்து 30ம் தேதியன்று பொதுக்கூட்டமும், நடைபயண நிறைவு விழாவும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் போது சில இடங்கள் வழியாக செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு அமைப்புகள்  அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் நடைபயணத்திட்டம் தொடர்பாக உளவுத்துறைக்கு வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்கள் வழியாக நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறின.

Related Stories: