×

காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் மேட்டூர், ஏற்காடு, குரும்பப்பட்டி பூங்காவில் மக்கள் குவிந்தனர்

சேலம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் ஒருவார காலத்திற்கு கொண்டாடும் வகையில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர்திருநாள், காணும்பொங்கல் என அடுத்தடுத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் முடிந்த 3வது நாளான இன்று காணும் பொங்கல் விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் கலாச்சாரத்தில் உறவுகளை காணும் நிகழ்வாக இவ்விழாவை பண்டைய காலம் முதல் கொண்டாடி வருகிறோம். உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது, கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்று திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என இவ்விழாவை கொண்டாடுகிறோம்.

இந்தவகையில் காணும் பொங்கல் தினமான இன்று தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான ஏற்காட்டிற்கு நேற்று மாலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கினர். இன்று காலை சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஏற்காட்டிற்கு வந்தனர். ஏற்காடு படகு இல்லம், வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம், அண்ணாபூங்கா,  மான் பூங்கா, லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

காலையில் கடுமையான குளிர் நிலவியது. அந்த கடும் குளிரோடு இயற்கையின் அழகை மக்கள் பார்த்து ரசித்தனர். மலையில் மேகங்கள் தவழ்ந்து செல்வதுபோல், பனிமூட்டம் காணப்பட்டது. அதனையும் சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர். அனைத்து இடங்களிலும் மதியத்திற்கு பின் வழக்கத்தை விட மிக அதிகளவு கூட்டம் காணப்பட்டது. இதேபோல், மேட்டூர்  அணை பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று குவிந்தனர். அவர்கள்  காவிரியில் நீராடி அணை கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழிகளை  பலியிட்டனர்.

பொங்கல் வைத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டனர். அணை  மீன்களை வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அணை பூங்காவுக்கு சென்ற  சுற்றுலா பயணிகள் மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, மீன் பண்ணை ஆகியவற்றை  கண்டு ரசித்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர்களுடன் பெரியவர்களும் ஊஞ்சல்  ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் சிலர்  மேட்டூர் அணை பூங்காவில் விளையாட்டு போட்டிகளை நடத்தினர். கூட்டம் அதிகமாக  காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை இன்று காணும் பொங்கல், உழவர் திருநாளையொட்டி திறந்திருந்தனர். இதனால், காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. குடும்பம் குடும்பமாக சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருந்தனர். பூங்காவினுள் புள்ளிமான், கடமான், முதலை, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் போன்ற வன உயிரினங்களை பார்த்து மகிழ்ந்தனர். 3டி படங்களின் முன் செல்போன்களில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். வழக்கத்தை விட குரும்பப்பட்டி பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவு திரண்டிருந்தனர். பூங்காவினுள் வனச்சரகர் உமாபதி தலைமையிலான வன ஊழியர்கள் ரோந்து சுற்றி வந்தனர்.

சேலம் மாநகரில் உள்ள கரியபெருமாள் கரட்டிலும் காணும் பொங்கல்விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநகர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். மக்கள் வருகையையொட்டி வழிநெடுகிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பூஜை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொண்டு, மலைப்பாதையில் நடந்து சென்று சிவன், பெருமாள், முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லில் கூட்டம் அலைமோதல்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் சவாரி செய்து ஐந்தருவி, சினி பால்ஸ், வியூபாய்ண்ட், ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.  அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Mattur ,Aradu ,Kurumbapatti Park ,Pongal , Visible Pongal, Mettur, Yercaud, Kurumbapatti Park,
× RELATED நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும்...