×

ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி இன்று மஞ்சு விரட்டு: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பங்கேற்பு

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பகுதியில் மாட்டுப்பொங்கல் அன்று கிராமந்தோறும் மாடுகளை அலங்கரித்து மந்தக்கரைக்கு அழைத்துவந்து மஞ்சுவிரட்டு நடைபெறும். ஆனால் குயிலாப்பாளையம் கிராமத்தில் மட்டும் காணும்பொங்கல் அன்று மஞ்சு விரட்டு நடைபெறும். அதன்படி இன்று காலையில் விழா துவங்கியது. விழாவினை காண்பதற்கு எல்லைப் பிடாரியம்மன் கோயில் வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானவர்கள் காலை முதலே குவிந்தனர்.

அலங்காரம் செய்யப்பட்ட சுவாமிகள் வீதிகளில் மேளதாளத்துடன் வலம் வர அதனுடன் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு எல்லைப் பிடாரியம்மன் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது. மாடுகளின் கொம்புகளுக்கிடையே தேங்காய், வாழைப்பழத்தால் அலங்கரிக்கப்பட்டது. வண்ணவண்ண பலூன்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் படங்களையும் கொம்புகளுக்கிடையே பொருத்தி மாடுகளின் உரிமையாளர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆரோவில்வாசிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மஞ்சு விரட்டையொட்டி கோட்டக்குப்பம் டிஎஸ்பி மித்ரன் தலைமையில் ஆரோவில், கோட்டக்குப்பம், வானூர், கிளியனூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Pongal ,Manchu ,Viratu ,Quilapalayam village ,Auroville , Auroville, Kanum Pongal, Manju Vrattu, participation of foreign tourists
× RELATED சிவகங்கையில் நடத்தப்பட்ட...