புதுடெல்லி: மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் குஷ்பூ சைஃபி என்ற பெண் தொடுத்த திருமண பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கில், கடந்த மே 11ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் சி. ஹரிசங்கர் ஆகியோர் அளித்த வெவ்வேறு தீர்ப்பால் இதுதொடர்பாக மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ராஜிவ் ஷக்தேர் வழங்கிய தீர்ப்பில், மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு வைத்துக்கொள்வதை ஆதரிக்கும் இந்திய சட்டப்பிரிவு 375-ஐ ரத்து செய்யவேண்டும் என தீர்ப்பளித்தார். ஆனால், ஹரி சங்கர் வழங்கிய தீர்ப்பில், மனைவி மைனர் அல்லாத பட்சத்தில் அவரின் விருப்பமின்றி கணவர் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருதமுடியாது என்றும், இது சட்டவிரோதமானது அல்ல என்றும் தீர்ப்பளித்தார்.
அதேபோல், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழங்கப்பட்ட கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஒரு நபர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திருமண பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குவது தொடர்பான மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ் நரசிம்ஹா மற்றும் ஜே.பி பார்திவாலா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறும் நிலுவையிலுள்ள அந்த வழக்குகளானது மார்ச் 21ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.