×

காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி: குஜராத் கொண்டாட்டத்தில் சோகம்

அகமதாபாத்: குஜராத்தில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ண வண்ண காற்றாடிகளை மக்கள் பறக்கவிட்டு கொண்டாடிய போது, காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து பலிவாங்கிவிடுகிறது.

அந்த வகையில் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்ததால் அவர் பலியானார். விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை, காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு இறந்தார். ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன், காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.

இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு இறந்ததாகவும், காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்ததாகவும், உயரமான இடங்களில் இருந்து காற்றாடி பறக்கவிட்டபோது கீழே தடுமாறி விழுந்த 46 பேர் காயமுற்றனர் என்று அதிகாரிகள் கூறினர்.


Tags : Gujarat , Kaatadi thread, 6 people including 3 children killed, tragedy in Gujarat celebration
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்