கோலி, தோனி மகள்கள் குறித்து அவதூறு ஒன்னு திருந்துங்க... அல்லது ஜெயிலுக்கு போவீங்க! மகளிர் ஆணைய தலைவி காட்டம்

புதுடெல்லி: விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியின் மகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியானதை கண்டித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி, சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் அல்லது அவர்கள் சிறை செல்ல தயாராக வேண்டும் என்று கூறினார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியின் மகள்கள் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறை நேற்று தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67பி (டி) பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தது. தொடர்ந்து சமூக ஊடக கணக்குகளை கையாளும் நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘பிரபலங்களின் மனைவி அல்லது அவர்களின் பெண் குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் செய்யப்படுகின்றன. மிகவும் கேவலமான கருத்துக்களை பதிவிடுகின்றனர். ட்ரோல் செய்பவர்கள், இரண்டு வயது பெண் குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை.

சமூக ஊடகங்களில் அவர்களைப் பற்றி தவறாக பதிவிட்டு துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

இது ஒருவகையான ட்ரெண்டாக மாறிவிட்டது. ஒரு கிரிக்கெட் வீரரையோ அல்லது பிரபலத்தையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களை தவிர்த்துவிடுங்கள். ஆனால் சிலர் அவரது குடும்பத்தைக் குறிவைத்தும், அவர்களது மனைவி, பெண் குழந்தைகள் குறித்தும் அநாகரீகமான கருத்துக்களைக் கூறுகின்றனர். அவர்கள் திருந்த வேண்டும்; அல்லது அவர்கள் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்தார்.

Related Stories: