வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 23 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும்: துணைவேந்தர் தகவல்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் நடப்பாண்டில் 23 வகையான புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படவுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடந்தது. பண்ணை வளாகத்தில் மஞ்சள், தயிர், பால், கஞ்சி, பன்னீர், கோமியம், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகைகள் கரைக்கப்பட்டு பட்டி அமைத்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட மாடுகளை பட்டியை மிதிக்க வைத்து கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. பண்ணை தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்த பேட்டியில், இந்த ஆண்டு நெல் பயிரில் 4 ரகங்கள் வெளியிட உள்ளோம். சம்பா பருவத்திற்கு ஏற்ற சன்ன ரகம் அரிசி ஒன்றும், தாளடிப்பட்டத்துக்கான அரிசி, எப்போகமும் விளையும் கவுனி அரிசி, புதிய ரக எள், சிறு தானிய ஆண்டை முன்னிட்டு புதிய ரக மக்காச்சோளம், முதல் முறையாக 4 மரப்பயிர்கள், பசுந்தாள் உரம் என 23 வகையான புதிய ரக பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய ரக பயிர்கள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றார்.

Related Stories: